ராம  ராஜ்ஜிய ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்கள் மீது அனுமதியின்றி கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. . உத்தரப்பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார்.

ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது.

மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்துள்ள இந்த ரத யாத்திரை, ராஜபாளையம் , ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் ,மதுரை வழியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 75 எம்எல்ஏக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அனுமதியின்றி கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்கள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.