FIR against Nainar Nagendren in Palaymkottai police station

கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழகம் முழுதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் கூட்டம் நடைபெற்றது

இதில், கலந்து கொண்ட பா.ஜ.க மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் இந்துக்களை விமர்சித்தால் கொலையும் செய்யலாம் என வன்முறையை தூண்டும் விதமாக பேசியிருந்தார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக நயினார் நாகேந்திரன் மீது 6 பிரிவுகளில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய அய்யா வைகுண்டர் வழிபாடு சிவசந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சுரேஷ், பாலகன், கிருஷ்ண பிரியா ஆகியோர் மீதும் அதே பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.