ஒரு கட்சியில் இருப்பவர்கள் சிதறிப்போனால் எதிரிகளுக்கு தான் பலன் கிடைக்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ்சிடம் இருந்து முதலமைச்சர் பதவியை பறித்து,  தானே முதலமைச்சராக வேண்டும் என விரும்பினார்.

இதனால் அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.

இதையடுத்து சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கடுப்பான ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்து தனது  போராட்டத்தைத் தொடங்கினார்.  

இதனைதொடர்ந்து சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கட்சியின் துணை செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று திரும்பினார்.

இதனிடையே இரு தரப்பு அணிகளும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினரும் எடப்பாடி அணியினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்கப்பட்டது.  

ஆனால் ஜெயலலிதா  மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியை நீக்க வேண்டும் என இரு நிபந்தனைகளை ஒபிஎஸ் தரப்பில் இருந்து விதிக்கப்பட்டது.

ஆனால் ஓபிஎஸ்சின் நிபந்தனைகளை ஏற்காத எடப்பாடி அணியினர் தொடர்ந்து தங்கள் இஷ்டப்படி பேச தொடங்கினர். இதே போல் ஓபிஎஸ் அணியினரும் வார்த்தைகளை வீசினர்.

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என ஒபிஎஸ் தரப்பு அறிவித்து விட்டு குழுவை கலைத்தது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் முதல் தொண்டர்கள் வரை, கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவதாக தெரிவித்தார்.

ஒரு கட்சியில் இருப்பவர்கள் சிதறிப்போனால் எதிரிகளுக்கு தான் பலன் கிடைக்கும் எனவும், அணி இணைப்பு என்ற பேச்சு விரைவில் செயல் வடிவம் பெறும் எனவும் தெரிவித்தார்.