தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வைகோ ஏங்குவதை ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. சமீப காலமாய் இதை அவரிடம் சற்று வெளிப்படையாக சொல்லியும் வருகிறார்கள். ஆனால் பிடித்த பிடியில் உறுதியாக வைகோ உறுதியாக நிற்க, உட்கட்சிக்குள் அதிர்ச்சி ஊற்றெடுக்க துவங்கியுள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே வைகோவின் கால்கள் அறிவாலயம் நோக்கி நடக்க துவங்கின. ஆரம்ப நிலையில் ஸ்டாலினும் இதற்கு இன்முகம் காட்ட துவங்கினார். அறிவாலயத்தில் வழக்கமாக ஸ்டாலின் கார் நிறுத்தும் இடத்தில் வைகோவுக்கு காருக்கு இடம் தந்துவிட்டு, தன் காரை கூட்டத்தோடு நிறுத்துமளவுக்கு ஸ்டாலின்  நட்புக்கரம் நீட்டினார். மீண்டும் தி.மு.க.வை நட்புடன் எதிர்கொள்ள வேண்டியதை நினைத்து சங்கோஜப்பட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கோ இது ஆச்சரியத்தை தந்தது. அதனால் வெகு சகஜம் காட்ட துவங்கினர் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால் அதேவேளையில் ஸ்டாலினின் நிழலாய் வலம் வரும், தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கோ வைகோவின் விஜயமும், ஸ்டாலின் அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அறவே பிடிக்கவில்லை. ‘எங்கே கட்சியை தி.மு.க.வுடன் இணைத்துவிட்டு, ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திவிடுவாரோ?’ என்கிற அளவுக்கெல்லாம் கலவரப்பட்டு பேச துவங்கினர். 

இதனால் ‘வைகோவிடம் கவனமாக இருங்கள் தளபதி. பழைய சம்பவங்களை மறக்க வேண்டாம். இன்னைக்கு நாம ஆட்சியில் இல்லாமல் போனதற்கு இவரது மக்கள் நல கூட்டணியும்தானே மிக முக்கிய காரணம்?’ என்று ஸ்டாலினை டைவர்ட் செய்தனர் அந்த இரண்டாம் கட்ட நிர்வாகிகள். அவர்கள் எதிர்பார்த்தபடி ஸ்டாலினும் சற்றே விலக துவங்கினார். 

செப்டம்பர் 15-ல் ஈரோட்டில் ம.தி.மு.க. நடத்திய அண்ணா நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்துக்கு காஷ்மீரிலிருந்து பரூக் அப்துல்லா வந்திருந்தார். ஆனால் சென்னையிலிருந்து ஸ்டாலின் வரவில்லை. இத்தனைக்கும் வைகோவுக்கு அந்து அரசியலில் பொன்விழா ஆண்டு விழாவும் கூட. அதேநாளில் விழுப்புரத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தியதை ‘வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட ஒன்று’ என்று விமர்சித்தனர், ஸ்டாலின் வராத கடுப்பிலிருந்த ம.தி.மு.க.வினர். உள்ளபடியே ஸ்டாலின் நினைத்திருந்தால் ஈரோடுக்கு வந்திருக்கலாம் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தும் கூட. இந்த சம்பவத்துக்கு பிறகு நிச்சயம் வைகோ விலகிச்செல்வார்! என்று தி.மு.க. புள்ளிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அது பொய்த்தது. வைகோ விடாமல் நெருங்கியே நின்றார்.

 

இந்த சூழலில்தான் துரைமுருகன் ‘ம.தி.மு.கவும், வி.சி.க.வும் எங்கள் கூட்டணியில் இல்லை. அவர்கள் எங்கள் நண்பர்கள் மட்டுமே.’ என்று கொளுத்திப்போட்டார் ஒரு அதிர்வேட்டை. அது பெரியளவில் ஒர்க் செய்தது. மீடியாக்களின் விமர்சனங்களும் கைகொடுக்க, ஸ்டாலின் மற்றும் வைகோவுக்கு நடுவில் பெரும் பிரளயம் உருவாவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் வைகோ அதையும் உடைத்தார், நட்பை ஒட்டவைக்கும் முகமாக அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து, நட்பு தொடர்வதை உறுதி செய்தார். 

இந்த செயலுக்கு ம.தி.மு.க.விலிருந்து சிலர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர் சிலர். அதற்கு வைகோ சொல்லிய ‘எல்லாமே உங்களுக்காகதான்’ எனும் கருத்து எடுபடவில்லை. மாறாக ‘தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகள் நமக்கான விதி, பழகிப்போன ஒன்று. மக்கள் நம்மை ஏற்கும்போது ஏற்கட்டும். துரைமுருகன் இவ்வளவு கேவலமான சூழலை உருவாக்கிய பின்னும் அங்கே போய் நிற்க வேண்டுமா?’ என்று கேட்டனர். இதற்குப் பிறகாவது வைகோவின் போக்கு மாறும் என்று எதிர்பார்த்தது அரசியல் வட்டாரம். ஆனால் விளாத்திகுளத்தில் நடந்த தன் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ, “வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெல்லும்.” என்றார். 

அத்தோடு விட்டாரா?...”இருபது தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது பதினெட்டிலாவது தி.மு.க. கூட்டணி வென்று, பொதுத்தேர்தலை சந்திக்காமலேயே தி.மு.க. ஆட்சி அமைக்கும்.” என்றார். இது அந்த அதிருப்தி நிர்வாகிகளை மேலும் அப்செட்டாக்கியுள்ளது. “தலைவர் கொஞ்சம்  கூட யோசிக்க மாட்டேங்கிறார். தி.மு.க. கூட்டணியை விட்டால் வேறு கதியே இல்லை எனுமளவுக்கு போக வேண்டுமா? ஸ்டாலினே கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டாலும் கூட ஏற்றுக்கொள்ளாமல் இப்படியே பேசுவார் போலிருக்குதே.” என்று வேதனை நிரம்ப ஜாலி கமெண்ட் அடித்துள்ளனர்.

தன் கட்சி கூட்டத்தில் அளவுக்கதிகமாய் பட்டாசு வெடித்தாலும் கூட கோபம் கொண்டு மேடையை விட்டு இறங்குவதும், பேட்டியில் நிருபர் சுருக்கென ஏதாவது கேட்டால் மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு வெளியேறுவதும்தான் வைகோவின் குணம். அப்பேர்ப்பட்டவர் இப்போது செய்வது வேற லெவல் அரசியலாக இருப்பதாக அவரது கட்சியினரே ஆச்சரியப்பட்டு அதிர்கிறார்கள்.