கந்த சஷ்டி கவசத்துக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்மீது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறாக  வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன,  கந்தனைப் பற்றியும் கந்தனின் கவசமான கந்தசஷ்டிகவசம் குறித்தும் மிக மோசமான வார்த்தைகளால், இழிவு படுத்தி அந்த சேனலில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தன. இந்த வீடியோவால் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்புகார்அளிக்கப்பட்டது. 

கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி  பேசிய,  போரூரை சேர்ந்த சுரேந்தர், வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் ஆகிய இருவரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து  வீடியோக்களும் நீக்கப்பட்டன, இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஓட்டேரியைச் சேர்ந்த  சோமசுந்தரம்,  மறைமலை நகரைச்சேர்ந்த  குகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும், இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும்  , கந்த்சஷ்டி கவசத்தையும் இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் மீது காவல் ஆணையர் அலுவகத்தில் பாஜக, இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

அந்த புகாரின், இந்து மதத்தை அழிக்கும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை எனவும், இந்து புராணங்கள் குறித்தும், இந்து கடவுள்கள் குறித்தும் இழிவாகப் போசிய  வேலு பிரபாகரனை கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.  இந்நிலையில் வேலு பிரபாகரன் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தியது என்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இன்று காலை வேலு பிரபாகரனை அவரது இல்லதில் வைத்து கைது செய்தனர்.