தமிழகத்தில் மதுக்கடைகள் மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இன்றே மனு தாக்கல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 

பல்வேறு எதிர்ப்பு, அதிருப்திகளுக்கிடையே 44 நாட்களுக்கு பிறகு 7ம் தேதி சென்னை தவிர தமிழகத்தில் மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பெண்களும், பொதுமக்களும் ஆங்காங்கே இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னையை தவிர மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது சமூக விலகல் என்பது மொத்தமாக காற்றில் பறந்தது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சிறப்பு வழக்கை தாக்கல் செய்தது. அந்த மனு தொடர்பாக கட்சி சார்பில் ஒரு அறிக்கையும் வெளியானது. அதில், 'ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 44 நாட்கள் ஆன நிலையில் மருத்துவர்களும், காவல்துறைப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நோய்த்தொற்று கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி அரசு சொன்னதைக் கேட்டு, நடுத்தர மக்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏழைகள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து வாழ வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இத்தனை நாள் போராடி நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருந்ததையும் மக்களின் துயரங்களை மதிக்காமலும் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டு இருக்கின்றது அரசு. இதைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் திறப்புக்கு எதிராக மநீம சார்பாக சிறப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று மதுக்கடைகளில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என்பதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் நீதிபதியின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அத்துடன் மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல் முறையீடு மேலும் ஊரடங்கு முடியும் வரை மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும். இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் செய்துள்ள மனு தாக்கலில், ‘உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது. ஒரு சில இடங்களில் விதிமீறல்களை அமல்படுத்தி ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல’’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்று வழியாக ஆன்லைன் மூலம் இன்றே மனு தாக்கல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நிறுவனத்துடனான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தமிழக அரசு முடித்து விட்டதாக கூறப்படுகிறது.