தமிழில் தபால்துறை தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டும் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால், அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியதும் அதிமுக எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மீண்டும் நண்பகல் 12.21 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.