Fasting from March 8- opies - Police cleared
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ் தரப்பினர் வரும் 8 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு அனுமதி வழங்க கோரி ஓ.பி.எஸ் தரப்பினர் கமிஷ்னரிடமும், டிஜிபியிடமும் இன்று நேரில் சென்று மனு அளித்தனர். இதையடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு அவரது தரப்பில் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெற்று ஆட்சியை கைபிடித்தார்.
ஓ.பி.எஸ் தரப்பில் சில எம்.எல்.ஏக்கள் எம்.பி.க்கள் அமைச்சர்கள் ஐக்கியமானாலும் எதிர்பார்த்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு ஓ.பி.எஸ்க்கு கிட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இருந்தாலும் ஓ.பி.எஸ்க்கு பொதுமக்களின் பலமும் அதிமுக நிர்வாகிகளின் பலமும் அதிகமாகவே உள்ளது.
மேலும் அவரது ஆதரவு நிர்வாகிகளை தினமும் ஒவ்வொரு மண்டலமாக சந்தித்து ஆலோசனை நடத்தி தனது ஆதரவை பெருக்கி வருகிறார் ஓ.பி.எஸ்.
இதனிடையே ஓ.பி.எஸ் சசிகலாவை விட்டு வெளியேறியதும் முதலில் கையில் எடுத்த ஆயுதம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்பதுதான்.
இதையடுத்து தான் காபந்து முதலமைச்சராக இருந்தபோதும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் என மீண்டும் மீண்டும் பொதுமக்களிடையே அறிவித்தார்.
மேலும் தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு திராணி இருந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கட்டும் என நேரடியாகவே சவால் விடுத்தார் ஓ.பி.எஸ்.
ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. பின்னர், ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள் மைத்ரேயன் தலைமையில் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்து விட்டு வந்தனர்.
இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடாததால் வரும் 8 ஆம் தேதி தனது தலைமையில் சென்னையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார்.
அதற்காக ஏற்கனவே கமிஷ்னர் அலுவலகத்தில் மதுசூதனன் தலைமையில் ஓ.பி.எஸ் தரப்பினர் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
அதுகுறித்து தகவல் ஏதும் போலீஸ் தரப்பில் வராத நிலையில், இன்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி, ஜே.சி.டி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீண்டும் கமிஷ்னர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி கூறியதாவது :
உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க கோரி ஏற்கனவே கமிஷ்னர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டோம்.
ஆனால் அதற்கு காவல்துறை தரப்பிலிருந்து எவ்வித தகவலும் வரவில்லை.
எனவே மீண்டும் நினைவூட்டும் விதமாக கமிஷ்னரிடம் மனு அளித்துள்ளோம்.
இந்த மனு குறித்து இன்று மாலைக்குள் பதில் அளிப்பதாகவும், போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்ற வகையில் முடிவு எடுப்பதாகவும் கமிஷ்னர் கூறியதாக முனுசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடைத்திருப்பதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
