காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்று தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அப்போது அவர்கள், காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக பக்கோடா பக்கோடா என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அண்ணாத்துரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்; விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை; பயிர்க் காப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் பல இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளையும் இளைஞர்களையும் பக்கோடா விற்கச் சொல்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக பக்கோடா பக்கோடா என கோஷங்கள் எழுப்பினர்.