விவசாய கடன் ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 29-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர்.

ரெயில்களிலும், பஸ்களிலும், பிற வாகனங்களிலும் வந்த அவர்கள் போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர். ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான ‘சுவராஜ் அபியான்’ தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து, தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லிக்கு சென்றனர்.

டெல்லி ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களில் ஆண்கள் அனைவரும் உடனடியாக அரை நிர்வாணத்துக்கு மாறி, மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டவாறே பிளாட்பாரத்தில் அணி வகுத்து சென்றனர். திடீரென உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அவர் களை அங்கிருந்து அப்புறப் படுத்தினார்கள். அதன்பிறகு, தமிழக விவசாயிகள் போலீஸ் பாதுகாப்புடன் ராம்லீலா
இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் டெல்லி மாநகரம் நேற்று ஸ்தம்பித்தது. பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது.

விவசாயிகளின் பேரணியையொட்டி, டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டிராக்டர்கள் மூலம் விவசாயிகள் நுழைந்து விடாமல் இருக்க காஜியாபாத், கவுதமபுத்தா நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

டெல்லியில் திரண்ட விவசாயிகளுக்கு டெல்லி குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். இதே போல் பல தன்னார்வ  தொண்டு நிறுவனங்களும் விவசாயிகளுக்கு உணவு அளித்தனர்

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் வகையில், இன்று ராம்லீலா மைதானத்தில் இருந்து  நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்கின்றனர். இதில் தற்போது லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.