எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவுடன் நடிகர் விஜய் இருப்பது போல் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி, உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விஜய். இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் அரசிலுக்கு வரவேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது தற்போது அதிகரித்து வருகிறது. அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், எம்.ஜி.ஆர்., ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆகியோருடன் விஜய் இருப்பது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தியது. சுவாமி விவேகானந்தருடன் காவி உடையில் நடிகர் விஜய் இருப்பது போன்று போஸ்டர்கள் தமிழகத்தில் ஒட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது, கள்ளக்குறிச்சி, காந்தி சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுவற்றில் சுமார் 50 அடி நீளத்திற்கு, நடிகர் விஜய் போஸ்டர் பிரமாண்டமாக ஒட்டப்பட்டுள்ளது. அதில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை உயர்த்திட, அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, சட்டமன்றத்தில் கையெழுத்திட, மக்கள் தளபதியாக விரைந்து எழுக! நல்லாட்சி தருக! புரட்சி தமிழனே! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ல் ஒளித்தே தீரும் எங்கள் சிங்கத்தின் கர்ஜனை. சட்டமன்றத்தில் தமிழினத்தின் தலைவராக தலைமை ஏற்க எழுந்து வா!! என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களை அச்சிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது கள்ளக்குறிச்சி இரண்டாவது வார்டு விஜய் ரசிகர் மன்ற தலைவர் பார்த்திபன் என்பவர் நடிகர் விஜய் விரைந்து அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் விரும்புவதாகவும், அதனால், அவரை அரசியலுக்கு அழைத்து தனது சொந்த செலவில் பிரமாண்ட போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசியல் விமர்சனங்களோடு யாரும் போஸ்டர்களை ஒட்டக்கூடாது, இணைய தளங்களிலும் பதிவிடக் கூடாது போன்ற கட்டளைகளை ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், மீண்டும் கள்ளக்குறிச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது நடிகர் விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.