famrers and public criticized government
தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாயே என்ன ஆனது என தெரியவில்லை. இதில், வடிகால் வசதி ஏற்படுத்த மத்திய அரசிடம் 1500 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது என விவசாயிகளும் பொதுமக்களும் விமர்சிக்கின்றனர்.
பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக 400 கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர் பழனிசாமி. தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளன என அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்படி இருக்கையில், கடந்த ஒருவாரமாக பெய்த மழையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய், அதற்காக முழுமையாக பயன்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாகவும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கேற்றாற்போல, அதே குற்றச்சாட்டை விவசாயிகளும் முன்வைத்தனர். கனமழை பெய்துவரும் நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள், நீரில் மூழ்கின. வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால்தான் தண்ணீர் வயலுக்குள் புகுந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். பருவமழை முன்னெச்சரிக்கையாக வடிகால்களை தூர்வாரியிருந்தால் வயல்களில் தண்ணீர் தேங்கியிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் குற்றச்சாட்டுகளை பார்க்கும்போது டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களை கூட தூர்வாரவில்லை என்றால் மற்ற மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டிருக்குமா? என்ற கேள்வியை எழுகிறது.
விவசாயிகளின் அதே குற்றச்சாட்டுகளைத்தான் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஸ்டாலின் முன்வைத்திருந்தார். நீர்நிலைகளை தூர்வாருவதற்கு பதிலாக முதல்வர் பழனிசாமி அரசு, கஜானாவைத்தான் தூர்வாரிக் கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
அதே விமர்சனத்தை வார்த்தை கூட மாறாமல் இன்று தினகரன் முன்வைத்துள்ளார்.
இப்படியாக நீர்நிலைகளை தூர்வாருவதற்கு என்பதாகக் கூறி ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாயில் நீர்நிலைகள் முழுவதுமாக முறையாக தூர்வாரப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை வந்த பிரதமரிடம் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்காக 1,500 கோடி ரூபாய் வழங்குமாறு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே குடிமராமத்துக்காக ஒதுக்கிய 400 கோடி ரூபாய் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், மேலும் 1,500 கோடி ரூபாய் வேறயா? இது என்ன ஆகப்போகுதோ? என விவசாயிகளும் பொதுமக்களும் தங்களது ஆதங்கங்களை கொட்டுகின்றனர்.
