சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள்  5,117 பேர் நீக்கவில்லை என திமுக வேட்பாளர் மருதுகணேஷ், உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மருதுகணேசின் முறையீடு, மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் நாளையே விசாரணைக்கு ஏற்றுக்கொளள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா
செய்யப்பட்டதாக கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் 44,999 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், இந்த போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்று  திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, ஆர்.கே.நகரில் 2,64,681 வாக்காளர்கள் உள்ளதாகவும், 45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தற்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை வைத்தார். அதாவது, ஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என்று அவர் முறையிட்டிருந்தார். 

திமுக வேட்பாளர் மருதுகணேஷின் முறையீடு, மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் நாளையே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து, போலி வாக்காளர்கள் குறித்து மருதுகணேஷ் விரைவில் மனு தாக்கல் செய்யப்படுவார் என்று தெரிகிறது.