வேறொரு சிறுவனின்  புகைப்படத்தை பதிவிட்டு சுர்ஜித்துக்கு திமுகவின் நாளிதழான முரசொலி இரங்கல் தெரிவித்துள்ளது  சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

25ம் தேதி திருச்சி, மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி  கிராமத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்கும் போராட்டம் கடந்த 3 நாட்களாக நடந்த நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 2 மணிக்கு குழிக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சுர்ஜித்தின் உடலை இரண்டு மணி நேரம் போராடி தேசிய மீட்புப்படையினர் மீட்டனர்.

பின்னர் நேற்று குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குழ்ந்தை மரணம் குறித்த செய்திகள் நேற்று சமூக வலைதளங்களில் அனைவரும் பகிர்ந்தனர். ஆனால் சுர்ஜித் புகைப்படத்திற்கு பதிலாக வேறு குழந்தையின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்தனர். இது தவறான புகைப்படம் என்று தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நேற்று  சுர்ஜித்துக்கு போய்ச்சேர்ந்த செல்லமே என்கிற தலைப்பில் இரங்கல் கவிதை வெளியிட்டு இருந்தது. தவறாக பகிரப்பட்ட வேறு குழந்தையின் புகைப்படத்தை வைத்து சுர்ஜித்துக்கு இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான திமுகவி நாளேடான முரசொலியே இந்த தவறை செய்யலாமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.