உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தபடி சிகிச்சை எடுத்து வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை முன்பு அதிகளவில் திரண்டுள்ள தொண்டர்கள் ’கலைஞர் வாழ்க’ என்று தொடர்ந்து முழக்கங்கள், ‘சந்திர கிரகணத்தை விழுங்கிய சூரியனே... எழுந்து வா’ என்றெல்லாம் கோஷம்  எழுப்பிய வண்ணம் உள்ளனர்.  காவேரி மருத்துவமனை தற்போது தொண்டர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என சொல்லலாம்.

சமூக வலைதளங்கள் முழுவதும், கலைஞர் உடல்நலம் குறித்த இந்த செய்திகளே ரவுண்டடிக்கிறது. முகநூலிலும், டிவிட்டரிலும் கலைஞரை பற்றி தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

படிப்பவர்களை கண்கலங்க வைக்கும் ஒரு தலைவன் மீது உண்மையான தொண்டன் வைத்திருக்கும்  பாசம் எப்படிப்பட்டது?  என்பதை சொல்லும் ஒரு பதிவு நம்மிடம் சிக்கியது.

இதோ, "நகரம் பரபரத்துக் கிடக்கிறது. வதந்திகள் அசுர பலம் பெற்று உலவுகின்றன. எது உண்மை எது பொய்யெனத் தெரியவில்லை. ராஜாஜி ஹால் என்கிறார்கள். அண்ணா சதுக்கம் என்கிறார்கள். கரகரக் குரலோனின் கடைசி நிமிடங்கள் என்கிறார்கள். ஒரு புறம் கோபாலபுரம் மக்கள் வெள்ளத்தில் நிறைகிறது. மறுபுறம் திமுகவின் அதிகார பூர்வ அறிக்கைகள் திடீர் நம்பிக்கைகளை உருவாக்குகிறது. 'அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. நல்லாருக்கார் கிளம்புங்க' என்று கனிகிறது காவல்துறை. ம்ஹூம். ஒரு அடி கூட நகர மறுக்கிறது கூட்டம்.. இணையப் போராளிகள் போல அல்ல இந்தக் கூட்டம். எதற்கும் அசராத இதயப் போராளிகளாக இருக்கிறார்கள், கலைஞரின் ரசிகர்கள்.

பொய்யாமொழி ... நீ போய் சாப்டு வந்துறுடே.. அப்பா இங்கன படுத்துருக்கேன்.. என தலையில் கட்டிய துண்டை உதறி விரித்து மரத்தடியில் தலை சாய்கிறார் ஒரு நரை மீசை.

.சார்... சார் !! இங்க படுக்ககூடாது.. எந்திருங்க !! ப்ளீஸ் !! என விரைகிறது காவல்துறை.

ஐயா.. இருங்க.. அட இருங்க!! .. சாப்டீங்களா.. தம்பி ..பொய்யாமொழி.. அப்படியே ஐயாக்கு 4 இட்லி வாங்கிட்டி வந்துர்றா என குழைகிறார் தந்தை.

அப்ப கடைசி வரைக்கும் நீ சாப்பிட மாட்ட ! என முணுமுணுத்துக் கொண்டே நகர்கிறான் பொய்யாமொழி.

அது.. ரொம்ப நாள் கழிச்சு குடிச்சிட்டேன் பாருங்க .. அதான் நம்ம சிங்கத்துக்கு கோபம்.. 18 வருசம் சார்.. 18 வருசம்.. திருநெல்வேலி பொதுக்கூட்டத்துல தலைவரு சொன்னாரு .. அய்யாக்கண்ணு.. குடிச்சா நீ திமுக காரனே கிடையாதுனு.. கேட்டதும் சாராயத்த விட மனசு ரணமா எரிஞ்சுது.. அன்னக்கு விட்டேன்.. இன்னிக்கு என் தலைவன்.. இப்படிக் கிடக்க ....

அய்யாக்கண்ணு.. விம்முகிறார்.. இருமுகிறார்.

அவரை நெருங்கினேன். ...சார் .. உங்க பையனுக்கு தலைவர் தானே பேர் வச்சார் ... கரெக்டா ? என்றேன்

எப்படி தம்பி என வியந்துவிட்டு அவரே தொடர்கிறார், "ஆமா தம்பி. திருநெல்வேலி 1988 மைதான பொதுக்கூட்டம் .. கொட்டுற மழை தம்பி.. பையன் ஆசுபத்திரில இருக்கான் தலைவா.. கொண்டு வர முடிலனு கையப் பிடிச்சு அழுதேன்.. "

தலைவர் என் கையப் பிடிச்சு அழுத்தி சொன்னாரு.. "அவனுக்கு பொய்யாமொழினு பேர் வைடான்னார்"..

"அதேன்.. அதோ..அங்க போறான் பாருங்க சிங்ககுட்டி .. என் தங்கம் பொய்யாமொழி.. " என இட்லி கடையை சுட்டிக் காட்டுகிறார்.

"ஐயா.. கமிஷனர் வந்தா எங்கள தான் சத்தம் போடுவார்.. இங்க நில்லுங்க பராவல்ல .. ஆனா படுக்காதீங்க !! என கால்துறை கடமையாற்ற , பொய்யா மொழி கையில் பார்சல் சகிதம் தடாலென உள்நுழைகிறான் . 'சார் இட்லி எடுத்துங்க' என மூவருக்கும் நீட்டுகிறான்..

"காசு பத்துச்சாடா பொய்யா ? " என்கிறார் தந்தை..

"காசே வாங்கலைப்பா கடைக்காரரு.. என் பேர மட்டும் கேட்டாரு .... சொன்னேன்.. சிரிச்சிட்டே அவர் பொண்ணு பேர சொல்லிட்டு இட்லிய தந்தார்.."

அத்தனை பேருக்கும் ஆர்வம் மேலிட, அனைவரையும் முந்திக் கொண்டு கேட்டார் காவலர்..

" அவர் பொண்ணு பேரு என்னங்க ? "

"தமிழழகி சார் " என்றான் பொய்யாமொழி...