Extraordinary political environment What will the governor decide? The politics of Tamilnadu ..
தமிழகத்தில் அரசியலில் அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில், தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பார் என்பது இன்று தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றதை அடுத்து, முதல்வர் பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால், முதல்வர் பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஸ்டாலின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் சேர்த்து விசாரித்த உயர்நீதிமன்றம், செப்டம்பர் 20(இன்று) வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தங்களின் தகுதிநீக்கம் செல்லாது என உத்தரவிடக்கோரி எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கும் ஸ்டாலின் வழக்குடன் சேர்த்து இன்று விசாரிக்கப்படுகிறது.
இன்றைய விசாரணையில் நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்தே ஆளுநர், தனது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பார். நேற்று முன் தினம் உள்துறை அமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்த ஆளுநர், நேற்று மீண்டும் ஒருமுறை உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் அடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
என்ன முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநர் இந்நேரம் திட்டமிட்டிருப்பார் என்றாலும் உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவைப் பொறுத்தே ஆளுநரின் நடவடிக்கை இருக்கும்.
