17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. 

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். அதை பிரதமர் மோடி ஏற்றார். பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில்  தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த  விழாவில் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார். 

இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீத்தாராமன்  உள்ளிட்டோர் அமைச்சர்களாக  பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.

இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், பாஜக எம்.பி.அல்லாத முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கேபினேட் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் மத்திய வெளியுறவுத்துறையின் செயலாளராக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை செயலாளர் பதவி வகித்து வந்தார்.  பின்னர் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

பிரதமருக்கு மிக நெருக்கமானவர் என கூறப்படும் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.