தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்துவிட்டு, ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தொடக்கத்தில் இருந்தே மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் நின்று பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போதுமான கவச உடைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்ற செய்திகள் வருத்தம் அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில்;- தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்துவிட்டு, ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனோ பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் இணைந்து முழு வீச்சில் கொரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதில் அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்களை முழுமையாக காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14-க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.ஆனால், அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கொரோனா மரணங்கள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளன. சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் திடீரென உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றன. இத்தகைய மரணங்களில் இருந்து பாடம் கற்க வேண்டியதும் கட்டாயமாகிறது. மேலும், சென்னை போன்ற இடங்களில் இப்போது வெறுமனே வீடு, வீடாக சென்று கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும்.

தொடக்கத்தில் இருந்தே மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் நின்று பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போதுமான கவச உடைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.கொரோனா யுத்தத்தில் போர் வீரர்களைப் போல மக்களைக் காப்பாற்றி வரும் அவர்களைக் கூடுதல் கவனம் செலுத்தி காத்திட வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்துவிடக் கூடாது. பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஊரடங்கினால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

10 நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே அவர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். அரசு அறிவித்த ரூ.1,000 உதவித்தொகை இன்னும் முழுமையாக சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும்போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். இவற்றை எல்லாம் நடைமுறைபடுத்துவதற்கு அரசு எந்திரத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.