தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவைளையில் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் தினசரி பாதிப்பு 6000 நெருங்கி வருகிறது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 3,79,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனாவால் நேற்று  97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,517ஆக உயர்ந்துள்ளது.

 

அதேபோல், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் பல்வேறு மாநில அரசுகள் கெடுபிடிகள் விதித்து வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தது.  இதனையடுத்து, மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்துக்குத் தடை விதிக்கக் கூடாது. உடனே இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. 

இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலாளர் சண்முகம்  காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு இம்மாத இறுதியில் நிறைவு பெற உள்ள சூழ்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் எந்த அளவில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த அளவிற்கு பாதிப்பின் தீவிரம் இருக்கிறது உள்ளிட்டவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. மிக முக்கியமாக இ-பாஸ் ரத்து தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.