வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. இருப்பினும், கடந்த 14-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 16,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 114 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு வருகிற 31ம் தேதியோடு முடிவடைய உள்ளது. 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழு பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து நாளை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கைமேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாகவே கூறப்படுகிறது.