விருதுநகர்  அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 

விருதுநகர்  மாவட்ட எல்லைப் பகுதியான செங்குளம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர்க்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கமான பணிகள் நடைபெற்று வந்த பொழுது திடீரென பட்டாசு தயாரிக்கும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த வெடிவிபத்தில் ஆலையில் பணிபுரிந்த ஐந்து நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். 

இந்த வெடி விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 பேர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் பட்டாசு அலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரே நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.