ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது., அணிகளின் இணைப்பு இன்று நடைபெறும் நிலையில், இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இந்த இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலகி தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன், எடப்பாடி அணி இணைவதற்கு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த இரு அணிகளும் இன்று இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் 1 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபா. பாண்டியராஜனும் இன்றே பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ள.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில், எம்.பி. மைத்ரேயன், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேபோல் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணிகள் இணைப்பு குறித்தும், சசிகலா குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் இறுதி கட்ட ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு இன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 நீண்ட இழுபறிக்கு பின் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்தால், ஏற்கனவே தன்னால்  அரசியலில் உருவாக்கப்பட்ட   பன்னீர் செல்வத்தின் மீதும்  பழனிசாமி மீதும்  கடும்  எரிச்சலில் உள்ள  சசிகலாவின் கோபம் பன்மடங்கு  அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.