இந்த தேசம் இப்படியொரு சென்சிடீவான தேர்தலை பார்த்து வெகுநாளாகிப் போச்சு. மோடி செய்யும் ஒவ்வொரு காரியமும், அவரை நோக்கிய மற்றவர்களின் அரசியல் நகர்வுகளும் பெரும் பதற்றத்தை உருவாக்கிக் கொண்டே உள்ளன என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. 
இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவின் கிளைமேக்ஸ் இதோ நெருங்கியேவிட்டது. ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கி, பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், மோடி மற்றும் ராகுல் இருவரும் ஏதோ வாக்கு எண்ணிக்கை நாளன்று இருப்பது போல் ஏக படபடப்புடன் காணப்படுகின்றனர் இன்று. காரணம், கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் ‘எக்ஸிட் போல்’ முடிவுகளை மீடியாக்கள் மற்றும் தனியார் ஏஜென்ஸிகள் வெளியிட இருக்கின்றன. 

மோடி அரசு மற்றும் பி.ஜே.பி.யின் செல்வாக்கு பற்றி மதில் மேல் பூனையாக நிலவரம் இருப்பதால் மோடி, ராகுல் இருவருக்குமே இது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. வெளிவர துடிக்கும் எக்ஸிட் போல் முடிவுகளின் ஒரு பகுதி லீக் ஆகிவிட்டதாகவும், அவற்றின் சாராம்சம் ‘பி.ஜே.பி.க்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் இருக்கும்.’ என்று ஒரு குரூப்பும், ‘ராகுல் பிரதமராகிறார்’ என்று இன்னொரு குரூப்பும் பேசிக் கொண்டிருப்பது பதற்றத்தை தீவிரமாக்கியுள்ளது. 

இந்த சூழலில், தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவசா “மைனாரிட்டி  கருத்து அடிப்படையில், நான் கூறுவது பதிவு செய்யப்படுவதில்லை. எனவே தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில் நான் பங்கேற்பது அர்த்தமற்றதாகிறது. எனவே இனிமேல் நடக்கும் தேர்தல்  நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான கூட்டங்களில் இருந்து நான் விலகி இருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.” தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

லவசாவின் இந்த சீற்றம் முழுக்க  முழுக்க மோடி மற்றும் அமித்ஷா இருவரின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், எதிர்கட்சியினர் மீது மட்டும் நடவடிக்கை லத்தியை நீட்டுவதுமான பாரபட்ச செயல்பாட்டின் விளைவே! என்று எதிர்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கொளுத்திப் போட்டுள்ளனர்.

லவசா விவகாரம் இப்போது தேசிய அரசியலரங்கில் பற்றி எரிகிறது, மிக சரியாக கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது இப்படி லவசா வெடித்துக் கிளம்பியிருப்பதும் பெரும் பின்னடைவாக பி.ஜே.பி. எண்ணுகிறது. 
ஆக, லவசா மற்றும் எக்ஸிட்  போல்! என டபுள் பாம்கள் பற்ற வைக்கப்பட்டிருப்பதால், அதன் வெடிப்பு விளைவுகளை எண்ணி அரண்டு போய் கிடக்கிறது பி.ஜே.பி.