எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, டிடிவி தினகரன் தரப்பினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கூறி, ஆளுநரிடம் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கடிதம் அளித்தனர்.

குதிரை பேரத்தை தவிர்க்கவே, டிடிவி ஆதரவாளர்கள் தற்போது, புதுவைச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களை, எடப்பாடி, ஓ.பி.எஸ் தரப்பினர் இழுப்பதை தவிர்க்கவே புதுச்சேரி செல்லப்பட்டதாக தகவல்
வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஜெ. ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த ஆர்.பி. உதயகுமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக இன்று காலை அறிவித்தார். ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளராக மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடியை நியமித்தார்.

மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜன் செல்லப்பா எம்எல்ஏ விடுவிக்கப்பட்டார். அந்த பதவிக்கு, மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்த கே.சி. வீரமணி விடுவிக்கப்பட்டதாக டிடிவி அறிவித்தார். கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் விடுவிக்கப்பட்டார்.

கரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். அம்மா அமைப்பு செயலாளர் பொறுப்பில் ஜி.செந்தமிழன் விடுவிக்கப்பட்டு, தென்சென்னை தெற்கு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென் சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விருகை வி.என். ரவி விடுவிக்கப்பட்டுள்ளதாக  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர். காமராஜ் நீக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகிகள் நீக்கம் தொடர்பாக சசிகலாவின் ஒப்புதலோடு செய்திருப்பதாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.