கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி ஜூலை 28 நள்ளிரவு 1.30 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று இரவு  திடீரென  11.45 மணியளவில்  ‘தலைவருக்கு ரொம்ப முடியலை. ரத்த அழுத்தம் இறங்கிக்கிட்டே இருக்கு’ என்ற தகவலை அடுத்து உடனே புறப்பட்டு வந்தார் ஸ்டாலின்.  அந்த நள்ளிரவிலும் கோபாலபுரம் இல்லத்து வாசலில் தங்கள் தலைவரின்  முகத்தைக் காண எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர் தொண்டர்கள். ‘கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க’ என்ற கோஷத்துடன்.

சில மணித் துளிகளில் கோபாலபுரம் மாடி அறையிலிருந்து கருணாநிதியை ஸ்ட்ரெச்சரில் கீழே அழைத்துவந்தனர். தலைவா தலைவா என்று தொண்டர்கள் கதறினார்கள். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஆம்புலன்ஸில் திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.