சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்ட விவகாரம் எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் பாய்ச்சலைக் கிளப்பியிருக்கிறது. ‘அக்யூஸ்ட் நம்பர் 1- ஆன ஜெயலலிதாவின் படத்தை சபையில் திறப்பதா?’ என்று ஸ்டாலின் நேற்று விளாசியிருந்தார். அதிலும் எதிர்கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமர வேண்டிய இருக்கைகளில் அ.தி.மு.க.வின் மாஜி வி.ஐ.பி.க்கள் அமர்ந்ததை தி.மு.க.வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விவாகரத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் முடிவில் தி.மு.க. உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஸ்டாலினின் அரசியல் நிழலாக இருப்பவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான மாஜி சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், ஏஸியா நெட் தமிழ் இணைய தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி...

ஏஸியா நெட்: முன்னாள் முதல்வர் உருவப்பட திறப்பு நிகழ்வில், எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளில் அ.தி.மு.க.வினர் அமர்ந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

மா.சு:    பொதுவாகவே இந்த ஆட்சியில் சட்டமன்ற மரபுகள் எல்லாம் மீறப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதிலும் இந்த படத்திறப்பு விஷயத்தில் அந்த மீறலானது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அதிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார வேண்டிய இடத்தில், யார் யாரோ வந்தமர்ந்தது கண்டிக்கத்தக்க ஒன்று. ஜனநாயக விரோத செயல்களில் இந்த ஆட்சி  தொடர்ந்து ஈடுபடுகிறது என்பதன் உதாரணம் இது. 

ஏஸியா நெட்:        இதற்கு பதிலடி தருவீர்களா?

மா.சு:    இந்த ஆட்சியின் அத்துமீறல்களை மக்கள் மன்றத்தில் திரைவிலக்கி காட்டிக் கொண்டே இருக்கிறோம். நிச்சயம் மக்கள் விரைவில் அவர்களுக்கு பதிலடி தருவார்கள். 

ஏஸியா நெட்:        ஸ்டாலின் நடத்தி வரும் ‘கள ஆய்வு’ கட்சியினரின் செயல்பாட்டை உத்வேகப்படுத்துமா?

மா.சு:    தளபதியின் இந்த செயல்பாடானது கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. காலையில் ஆரம்பித்து மாலை வரை ஒவ்வொரு மாவட்டத்தின் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பிரிவு பிரிவாக சந்தித்து, கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்கிறார். 
இவ்வளவு அதிகமான நபர்களுடன், இவ்வளவு நுணுக்கமாக ஒரு மாபெரும் கட்சியின் செயல்தலைவர் சந்தித்து ஆலோசிப்பது அசாதரணமான காரியம். தளபதியின் இந்த முயற்சியும், கீழ்நிலை நபர் துவங்கி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை ஒத்துழைப்பும் கட்சியை நிச்சயம் இன்னும் உத்வேகப்படுத்தும். 

ஏஸியா நெட்:        ஆனால் ஒவ்வொரு மாவட்டத்தினரும் தங்களுக்குள் இருக்கின்ற உட்கட்சி பூசலுக்கு பஞ்சாயத்து  பேசச் சொல்வது போல்தானே புகார்களை கொட்டுகிறார்கள்?

மா.சு:    ஜனநாயக அமைப்புடைய அரசியல் இயக்கத்தில் கட்சியின் எல்லா அங்கங்களிலும் நடக்கின்ற உண்மை நிகழ்வுகளை தலைமை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. 

தவறு செய்பவர்கள் தங்களை திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பை தருவதாக இந்த ஆய்வு அமையும். கீழ் நிலை நிர்வாகியை நாம் மதிக்காவிட்டால், அவர் தலைமையிடம் தன் தவறுகளையோ, தன் அலட்சிய குணத்தையோ சுட்டிக்காட்டிடும் வாய்ப்பு உருவாகும் என்கிற எச்சரிக்கை உணர்வு முக்கிய நிர்வாகிகளின் மத்தியில் ஏற்படுத்தவும் இந்த கள ஆய்வு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. 

ஏஸியா நெட்:    கள ஆய்வுக்கு வரும் கட்சியினரிடம் ‘சர்வாதிகாரத்தை கையிலெடுப்பேன்’ அப்படின்னு தளபதி சொல்றார்! இது சாத்தியமா?

மா.சு:    (சிரித்தபடி) தளபதி அப்படி எந்த நேரத்திலும் அவர் சொல்ல  மாட்டார். ஜனநாயகத்தில் பெரும் மதிப்பும், நம்பிக்கையும் உள்ள தலைவர் அவர். 
ஏஸியாநெட்:    அவர் அப்படி சொன்னதாக உங்கள் கட்சி நிர்வாகிகளே பத்திரிக்கைகளில் பகிர்கிறார்களே!?

மா.சு:    இல்லை, தவறு செய்யும் நிர்வாகிகளின் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை உண்டு, என்று தளபதி சொல்லியிருப்பார். காரணம், ஜனநாயகத்தால் கட்டமமைக்கப்பட்ட இந்த கழகத்தில் தவறு செய்யும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். அதுதான் கழகம் ஆரோக்கியமாய் செழித்தோங்க வழி செய்யும். 

ஏஸியா நெட்:    ஆய்வு முடிக்கப்பட்ட மாவட்டங்களில் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதா?

மா.சு:    அது தளபதிக்குதான் தெரியும். விசாரணைக்கு என்று ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கையை தளபதிக்கு அனுப்புவார்கள் அதன் அடிப்படையில் தளபதி நடவடிக்கை எடுப்பார்.

ஏஸியா நெட்:    முரசொலி மாறனுக்கு எதற்கு டெல்லியில் சிலை? இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்...என ஜெயக்குமார் கேட்டிருக்கிறாரே!

மா.சு:    சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறப்பதற்கு இவர்கள் ஜனாதிபதியை, பிரதமரை, கவர்னரை அழைத்துப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் வராமல் மறுத்துவிட்டார்கள். இதை சுட்டிக்காட்டி, ஏன் அவர்கள் வரவில்லை! இதற்கு ஜெயக்குமார் பதில் சொல்ல வேண்டும்! என தளபதி கூறியிருந்தார். இதற்கு பதில் சொல்கிறேன் என்று ஜெயக்குமார் ஏதேதோ சொல்லியிருக்கிறார். 

முரசொலி மாறனின் சிலை நாடாளுமன்றத்தில் இருக்கிறதென்றால் அதற்கு முழுமையான தகுதியுடையவராய் இருந்தார் அவர். மாநில சுயாட்சி தத்துவம் பற்றி நாடு தழுவிய விழிப்புணர்வை, புரிதலை ஏற்படுத்திய சாதனையாளர் அவர். எல்லா தலைவர்களுக்கும் இந்த உண்மை தெரியும், ஆனால் ஜெயக்குமாருக்கு இது புரியாமல் போனதுதான் ஆச்சரியமே!