விரைவில் சென்னையில் நடைபெற உள்ள ஒரு விழா தமிழக அரசியலில் அடுத்த புரட்சிக்கு அடித்தளமாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசினார். அப்போது கமல் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றார். இதனை தான் விழாவாக எடுக்க உள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் கமல் 60 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக இருக்கும் என்றும் கணேஷ் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி கொடுக்கும் மிக முக்கிய நபர்களில் ஒருவராக ஐசரி கணேஷ் உள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய கமல், தான் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார். மேலும் தனக்கு எடுக்கப்படும் விழா வெறும் சினிமா விழாவாக இருக்காது என்றார். தமிழகத்தில் அடுத்து நிகழ உள்ள அரசியல் புரட்சிக்கான அடித்தளமாக இருக்கும் என்று கமல் கூறினார். இதனை கேட்ட மாணவ, மாணவிகள் உற்சாக குரல் எழுப்பினர்.

ஏற்கனவே கமல் சினிமாவிற்கு வந்த 50 ஆண்டுகளை விஜய் டிவி பிரமாண்ட விழாவாக எடுத்தது. அதில் ரஜினிகாந்த மட்டும் அல்லாமல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது கமல் வெறும் நடிகராக மட்டுமே இருந்தார். ஆனால் தற்போது அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். மேலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கணிசமான வாக்குகளை அவரது கட்சி பெற்றது.

இந்த நிலையில் தனது 60வது ஆண்டு விழாவை புரட்சிக்கான அடித்தளம் என்று கூறியிருப்பது தமிழக அரசியலின் புதிய கூட்டணிக்கான அச்சாரம் என்பதை மறைமுகமாக கமல் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொள்ள உள்ளதால், அரசியல் விவாதங்களுக்கு குறைவே இருக்காது. மேலும் விஜயகாந்துக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே ரஜினி தலைமையில் கமல், விஜயகாந்த், ராமதாஸ் மூலம் ஒரு கூட்டணி அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.