திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று வட இந்திய ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகும் கருத்துக்கணிப்புகளால் திமுக முகாம் குஷியில் ஆழ்ந்திருக்கிறது. 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக - அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறின. தேர்தலுக்கு பிறகு திமுக - அதிமுகவுக்கு இடையே 1 சதவீதம் மட்டுமே வாக்கு வித்தியாசம் இருந்தது. ஆனால், இப்போது வரும் கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் கடும் போட்டி என்று எந்தக் கருத்துக்கணிப்பும் சொல்லவில்லை. திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்றே கருத்துக்கணிப்புகள் வருகின்றன.  

இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ஸ்டாலின் முன்னெடுத்த 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. எனவே ஸ்டாலின் தலைமையைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதை தமிழக எதிர்க்கட்சிகள் ஒரு உத்தியாக வைத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் தொடர்ச்சியாக திமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக்கணிப்புகள் ஸ்டாலினை மட்டுமல்ல, அக்கட்சியினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

2004-ம் ஆண்டு 40 நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல இந்த முறையும் வெல்ல வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போதெல்லாம் ஸ்டாலின் குறிப்பிட்டு வருகிறார். இதனால், தொகுதி பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகப் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவும் தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் ஸ்டாலின் கூறியிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இந்தக் கூட்டணியை சட்டப்பேரவைத் தேர்தல் வரை அப்படியே தொடர வைக்கவும் திமுக விரும்புவதால், தொகுதி பங்கீட்டில் திமுக கறார் காட்டாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணி அதிகம் வெல்லும் எனக் கருத்துக்கணிப்புகளில் சுட்டிக் காட்டப்படும் மாநிலமாக தமிழகம் மட்டுமே உள்ளது. இதனால் தமிழகத்தைப் பற்றி எந்தக் கவலையும்படாமல் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.