பள்ளிக் கல்வித் துறையில் ஆராயாமலும், ஆலோசிக்காமலும்; எடுக்கப்படும் இத்தகைய திடீர் முடிவுகள் அந்தத் துறையை மட்டுமல்ல; ஒட்டு மொத்தத் தமிழகத்தையே தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன என்பது கண்கூடான உண்மை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளிகளில் ‘ஆன்லைன்” மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது என்றும் அதை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் வீராவேசமாக அறிவித்த அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே, “ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது. அவற்றுக்குத் தடை ஏதுமில்லை” என ‘வழக்கம் போல்’ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மறு அறிவிப்பொன்றினைச் செய்திருக்கின்றார்.
பள்ளிக் கல்வித்துறையின் கடந்த காலச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இத்தகைய குளறுபடிகள் புதிதானவை அல்ல என்றாலும், இதனால் பாதிக்கப்படப் போகும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை குறித்து நாம் அனைவருமே கவலையும் அதிர்ச்சியும் அடையும் வகையில் மாறிமாறி வரும் இத்தகு அறிவிப்புகள் அமைந்துள்ளன என்பதைப் பள்ளிக்கல்வித்துறை சற்றும் உணர்ந்தாகத் தெரியவில்லை. ஆராயாமலும், ஆலோசிக்காமலும்; எடுக்கப்படும் இத்தகைய திடீர் முடிவுகள் அந்தத் துறையை மட்டுமல்ல; ஒட்டு மொத்தத் தமிழகத்தையே தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன என்பது கண்கூடான உண்மை.
கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் சிறிதும் குறையாமல் தமிழகம் இன்றும் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில் சிலருடைய அழுத்தத்திற்குப் பணிந்து உடனடியாக பள்ளிகளைத் திறந்து விட வேண்டும் என்றும், அவர்தம் விருப்பத்திற்கொப்ப ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முனைப்புடன் எதைப்பற்றியும் கவலைப்படாது பள்ளிக்கல்வித்துறை செயல்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் பின் விளைவுகளை உருவாக்கக் கூடியதுமாகும்.
‘ஆன்லைன்” வகுப்புகளைப் பொறுத்தமட்டில் கல்வி கற்கும் சூழலிலும், முறைகளிலும் நகர்ப்புற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. கிராமப்புற மாணவர்களுக்கு; குறிப்பாக, மலைவாழ் மாணவர்களுக்கு இத்தகைய "ஆன்லைன்” வகுப்புகளின் மூலம் மட்டுமே கற்கக்கூடிய வசதிகள் இப்போது இல்லை. தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ ஒரு கோடியே முப்பது லட்சம் மாணவர்களில் அறுபது சதவீதம் மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஆன்லைன்” வகுப்புகளை முறைப்படி மாணவர்களுக்கு பயன்தரத்தக்க வகையில் நடத்துவதற்கான உரிய வசதிகளோ, ஏற்பாடுகளோ இன்னும் முழுமையாகச் செய்யப்படவில்லை.
பள்ளிகளைத் திறக்கும் விவகாரத்திலும் இப்போதுள்ள ‘கொரோனா சூழலைக்’ கருத்தில் கொண்டு கூடுதல் அக்கறையுடன் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ‘கொரோனா தாக்கம்´ முற்றிலும் தணிந்த பின்னர், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தனித்தனியாக முதல் கட்டத்திலும், அதன் பின்வரும் மாதங்களில் தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களுக்கான பள்ளிகளைத் திறக்கவும் அரசு ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். மழலையர்களுக்கான வகுப்புகளை கொரோனா தொற்று நோய் முற்றிலும் நீங்கிய பிறகே திறப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும்.
ஒரு மாணவனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அனைத்து மாணவர்களுக்கும் மட்டுமின்றி அவர்தம் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடும். எனவே, ஒவ்வொரு மாணவர் மற்றும் அவர்களுடைய உடல்நிலை குறித்த முழுத் தகவல்களையும் பள்ளிக்கல்வித்துறை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டும். 
இன்னும் கொரோனா தாக்கம் மிகுந்துள்ள மாவட்டங்களாக சிவப்புக் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளையும் திறப்பதில் உள்ள சிக்கல்களை அரசு உள்வாங்கி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்படுவது மிக முக்கியமான ஒன்றாதலால் அது குறித்தும் அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக பள்ளிக்கல்வித்துறை இன்று மிகுந்த சவாலான ஒரு காலக்கட்டத்தைக் கடக்க வேண்டி இருக்கின்றது. கொரோனா நோய்த் தொற்றுப் பிடியில் இருந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களையும் காப்பாற்றும் பொறுப்பு மட்டுமல்ல, தமிழக மாணவர்களின் எதிர்கால மருத்துவப்படிப்புக் கனவுகளைக் கானல் நீராக்கி விட்ட ‘நீட்” தேர்வு கொடுமையில் இருந்தும் நமது மாணவர்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு நமது கல்வித்துறைக்கு இருக்கின்றது." என்று அறிக்கையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.