தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், செல்வராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின். டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதையொட்டி அதிமுக  எம்.பி. மைத்ரேயன் மாநிலங்களவையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்; சக எம்.பி.க்கள் அவரை தேற்றினர்.அந்த பேச்சில் தனது எதிர்காலம் குறித்து மைத்ரேயன் குறிப்பிட்டது தான் அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

மாநிலங்களவையின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளது தனக்கு  மன திருப்தி அளித்தாலும் ஒரு சம்பவம் மட்டும் முள்ளாய் உறுத்துகிறது.முன்பின் அறியாத எத்தனையோ பேருக்கு இந்த சபை இரங்கல்தெரிவித்துள்ளது; 

ஆனால் 2009ல் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. மவுன அஞ்சலியும் செலுத்தப்படவில்லை.எனவே என் வாழ்வின் முடிவுக்குப் பின் எனக்காக இரங்கல் தீர்மானமோ மவுன அஞ்சலியோ இந்த சபையில் வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இதற்குப் பிறகு மைத்ரேயன் பேசியதுதான் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. நீண்ட அனுபவத்திற்கு பிறகு மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளேன். பார்லிமென்ட்டைப் பொறுத்த வரை இது எனக்கு அஸ்தமன நேரம்.ஆனால் மாநில அரசியலில் இனிமேல் தான் சூரியயோதயம் ஆரம்பிக்கப்போகிறது என்று மைத்ரேயன் தெரிவித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு உறுதுணையாக இருந்து டெல்லியுடன் நெருக்கம் காட்டியவர் தான் மைத்ரேயன். ஆனால் அணிகள் இணைந்த பிறகு மைத்ரேயன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டார். ஓபிஎஸ்ம் அவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

மக்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். மாநிலங்களவையிலாவது மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.

இதையடுத்து தான் அவரது எண்ணங்கள் மாறத் தொடங்கிவிட்டாக அதிமுகவினர் கூறுகின்றனர். இந்நிலையில்தான்  தனது வாழ்வின் சூர்யோதயம் குறித்து அவர் பேசி தனது முடிவை உணர்த்தியுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன