டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், பெரிய குளம் தொகுதி அமமுக வேட்பாளருமான டாக்டர் கதிர்காமு மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர். கதிர்காமு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக இவர் டிடிவி தினகரன் அணியில் இணைந்தார்.

இதையடுத்து சபாநாயகர் தனபால் உத்தரவின் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் தற்போது அமமுக சார்பில் மீண்டும் பரிசு பெட்டி சின்னத்தில், பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் கதிர்காமு, தன்னிடம் சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர், பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து கதிர்காமு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் தலைமறைவாகியுள்ளார். என்றும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது..

இது குறித்து அதிமுகவின் ஜெ தொலைக்காட்சியில் கதிர்காமு தலைமறைவு என்று செய்தியும் வெளியிட்டது. ஆனால் அவர் பெரியகுளம் அருகே உள்ள கைலாசம்பட்டி என்னும் ஊரில், தங்கதமிழ்ச்செல்வன் உடன் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்த சூழலில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தங்க தமிழ் செல்வன், கதிர்காமு ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கதிர்காமு, என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்துகின்றனர் என குறிப்பிட்டார்.

என் மீது வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வருகிறது. ஓபிஎஸ் அவரது மகன் மற்றும் அவரது தம்பி ஆகியோர் எங்கள் மீது பொய் புகாரை பரப்புகின்றனர். தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால், இது போன்ற குற்றச்சாட்டை பரப்புகின்றனர். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்க தயார் என்று கூறினார்.