ரூ.45 கொடுக்க முடியாது..! முக்கால் மணி நேரமாக விவாதம் செய்து டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்ற முன்னாள் எம் எல்.ஏ. பாலபாரதி...!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சுங்க சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு காரில் பயணம் செய்தபோது கரூர் அருகே உள்ள மணவாசி சுங்கச்சாவடி கடக்க வேண்டியுள்ளது. அப்போது ரூபாய் 45 கட்டணமாக கேட்டுள்ளனர். அதற்கு "தான் முன்னாள் எம்எல்ஏ" என கூறி தன்னுடைய அடையாள அட்டையை காண்பித்து உள்ளார் பாலபாரதி. அதற்கு ஊழியர் தற்போது பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு என தெரிவிக்கவே... உடனடியாக பாலபாரதி இதற்கு முன்னதாக இருந்த பல சுங்கச்சாவடிகளை இலவசமாக தான் கடந்துவந்தேன். இங்கு மட்டும் ஏன் வசூல் செய்கிறார்கள் என சப்தமிட்டு உள்ளார்.

பின்னர் அங்கிருந்த கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருகை புரிந்த பின்னர் பேசி பாலபாரதி அங்கிருந்து கட்டணம் செலுத்தாமல் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தன்னை ஊழியர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பாலபாரதி. இதுகுறித்து ஊழியர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கும்போது பணி முடிந்து வசூல் செய்த தொகையை எடுத்துச் செல்வதற்காக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருந்தனர். ஆனால் அவர்களைப் பார்த்து தவறுதலாக புரிந்துகொண்டு துப்பாக்கி காட்டி மிரட்டியதாக தெரிவித்துள்ளார் பாலபாரதி.. என குறிப்பிட்டு உள்ளனர். இந்த சம்பவம் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.