அதிமுகவின் சாபம் செந்தில் பாலாஜியை சும்மா விடாது என்று அதிமுக கொள்கை பரப்பு  துணைச் செயலாளரும் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் கரூரில் எம்.ஜி.ஆர் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக. கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைசெல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தாக்கி வைகைச் செல்வன் பேசினார். “விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி த்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் அளித்த ஆதரவைப் பார்த்து, மு.க.ஸ்டாலினின் முதல்வர் ஆசை 2021-ல் ஈடேறுமா எனத் தற்போது பலரும் பேசதொடங்கிவிட்டனர். ஜெயலலிதா பேசியதைப் போல அதிமுக எனும் இயக்கம், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கும்.
கரூரில் உள்ள செந்தில்பாலாஜி மீது 2017-ல் தொடுக்கப்பட்டது என்ன வழக்கு என்று உங்களுக்குத் தெரியுமா? அவருடைய உற்றார் உறவினருடன் சேர்ந்து அரசுவேலைக்கு உத்தரவாதம் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து, அதை திருப்பி கொடுக்காமல் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார் கொரானா வைரஸ் என்கிற செந்தில்பாலாஜி. அந்த வழக்கில் இப்போதுதான் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். சென்னையில் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டனர். திக்கு தெரியாத காட்டில் நின்று செந்தில் பாலாஜி கதறி கொண்டிருக்கிறார்.  நான் ஒன்றைச் சொல்கிறேன், அதிமுகவின் சாபம் அவரை சும்மா விடாது.” என்று வைகை செல்வன் பேசினார்.