சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இன்று மேற்கொண்ட சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவர் மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இந்த சோதனையில் பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்குகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நாமக்கல் மாவட்டம் - 33 , சென்னை -14 , ஈரோடு -8 , சேலம் -4 , கோயம்புத்தூர் -2 , கரூர் -2 , கிருஷ்ணகிரி- 1 , வேலூர் -1 , திருப்பூர் -1 , கர்நாடகா மாநிலம் பெங்களுர் -2 , ஆந்திர மாநிலம் சித்தூர் - 1 உட்பட 69 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ 4,85,72,019 மதிப்பில் சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மகன் தரணிதரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து சோதனையில் ரூ.2.37 கோடி ரொக்கம், 1.130 கிலோ தங்கம், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி ரொக்கம், கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இன்று மேற்கொண்ட சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
