ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவரே என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதி ஒன்றில் போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால், இந்த இரு தொகுதிகளுமே அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜகண்ணப்பன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விரைவில் திமுகவில் இணையபோவதாகவும் ராஜகண்ணப்பன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை ராஜகண்ணப்பன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக அமைச்சர்கள் சுற்றுலா செல்வதற்காகத்தான்  வெளிநாட்டுப் பயணமே பயன்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 2,450 கோடி ரூபாய்க்கு பன்னாட்டு முதலீடுகள் வர உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டை 1,200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்கு முன்பு ஐந்து லட்சம் கோடிக்கு முதலீடு வரும் முதல்வர் சொன்னது என்னவாயிற்று?
இதையெல்லாம் வைத்து எதிர்க்கட்சியினர் வெள்ளை அறிக்கை கேட்டால் “வெள்ளரிக்காய் கூட தர முடியாது” என சிறுபிள்ளைத்தனமாக அமைச்சர்கள் பதில் பேசி வருகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாங்கம் இது. மத்திய அரசு கூறுவதைச் செய்வது மட்டுமே இந்த அரசின் வேலையாக உள்ளது” என்று அதிமுக அரசை கண்டித்து பேசினார்.
இந்தி திணிப்பு விவகாரம் குறித்து பதில் தெரிவித்த ராஜகண்ணப்பன், “இந்தித் திணிப்பு தொடர்பாக இதுவரை அதிமுக அரசு என்ன பதில் கூறியுள்ளது? இருமொழி கொள்கையில் இந்த அரசு என்ன நிலைப்பாட்டில் உள்ளது? இந்தித் திணிப்பை முதன் முதலில் எதிர்த்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். இன்றைக்கு உள்ள ஒட்டுமொத்த திராவிட இயக்கத்துக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே” என்றும்  தெரிவித்தார்.