அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா இருந்தவரை மீடியாக்களின் முன், கொட்டாவி விடுவதற்குக்கூட வாயை திறக்க பயந்த அமைச்சர்கள், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” வாய்க்கு வந்ததை எல்லாம் பேச்சாக பேசிவருகின்றனர்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கருப்பண்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரின் முன்னுக்குப் பின் முரணான மற்றும் தவறான பேச்சுகள், மக்கள் மத்தியிலும் சமூகவலைதளங்களிலும் நகைப்புக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிவருகின்றனர். அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை என தெரிவித்தார்.

மேலும், அணிகள் இணைந்தாலும் சில அதிருப்திகளும் கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக மைத்ரேயன் தெரிவித்த கருத்துக்கு மாற்றுக்கருத்து இல்லை எனவும் ஆனால் காலப்போக்கில் கருத்துவேறுபாடுகளை மாறிவிடும் எனவும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.