கலைஞரின் நண்பருக்கு சிலை..!  

கலைஞரின் மிக நெருங்கிய தோழரும், குடும்ப நண்பருமான மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து பேரறிஞர் பெருந்தகை 'அண்ணாவின்' உற்ற துணையாகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற தோழராகவும் குடும்ப நண்பராகவும் இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம். 


இவரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, 500 கிலோ எடையில் 7 அடி உயரம், 8 அங்குலம் கொண்ட திருவுருவச் சிலையை, அவர் வாழ்ந்த 
பூர்வீக  கிராமமான திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, நூற்றாண்டு மலர் புத்தகத்தை வெளியிட்டார். 

இந்நிகழ்வின் போது பேசிய ஸ்டாலின், "அன்பிலார் செயல் வீரராக, ஒரு தளபதியாக விளங்கினார்.. திமுக மட்டுமின்றி அனைத்து கட்சியினருக்கும் ஒரு தலைவராக இருந்தார்.. திருச்சி மாவட்டம் தீரர்களின் மாவட்டமாக மாற்ற முக்கிய காரணமானவர்" என தொடர்ந்து புகழாரம் சூடினார்.  

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.பி திருச்சி சிவா, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இவரது நண்பரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், லால்குடி கிராம மக்கள், தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 

தன் தாத்தாவான அன்பில் தர்மலிங்கத்தின் திரு உருவ சிலையை ஸ்டாலின் திறந்து வைத்து புகழாரம் சூட்ட, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனம் நெகிழ்ந்து தொண்டர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.