திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  தற்போது அந்த தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுவார் என்று தெரிகிறது..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லை தொகுதியை கேட்டு வந்த நிலையில் அந்த தொகுதி திமுகவுக்கு சென்று விட்டது. திண்டுக்கல் தொகுதிக்கு குஷ்பு அச்சாரம் போட்டு வந்தார் திண்டுக்கல்லும் திமுகவுக்கு சென்றுவிட்டது. இந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் முயற்சி மேற்கொண்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்த வரையில்  ஈரோட்டு தொகுதியை நம்பியிருந்தார். ஆனால் அந்த தொகுதியும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில்தான் சிவகங்கை தொகுதியில்   சிதம்பரத்தின் மகன் அல்லது மருமகள் போட்டியிடுவார்கள் என்று தகவல் பரவியது. ஆனால்  2009 -ம் ஆண்டு விருதுநகர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட மாணிக்கம் தாகூருக்கு இந்த தொகுதி வழங்கப்பட உள்ளதாக டெல்லி வட்டார தகவ்லகள் தெரிவிக்கின்றன.

மாணிக்கம் தாகூருக்கு சிவகங்கை சொந்த தொகுதி என்பதால் மாணிக்கம் தாகூருக்கு இந்த தொகுதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மாணிக்கம் தாகூர் சிவகங்கைக்கு மாறினால் தனக்கு விருதுநகரை தரவேண்டும் என்று ஈவிகேஎஸ் கேட்டு வருகிறாராம்.

விருதுநகரை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கலாம் என்று காங்கிரஸ் தலைமையும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து  விருதுநகர் ஈவிகேஎஸ் -சுக்கும் சிவகங்கை மாணிக்கம் தாகூருக்கும் ஒதுக்கப்படுவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு  அடித்தது லக்கி பிரைஸ்.