சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் முடிவு எடுப்பதில் காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க சொன்னதாகவும் சிலர் தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்த அன்றைய இரவு 10.30மணிக்கு எனக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்தது. ‘திமுக எடுக்கும் முடிவுகளை காங்கிரசும் எடுக்க வேண்டும்’ என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதுபற்றி உடனடியாக அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டேன். அப்படி இருக்கும் போது நான் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்படி செய்திகள் வருகின்றன. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ராகுல்காந்தி, முகுல்வாஸ்னிக்கை கலந்து பேசியே முடிவுகளை அறிவித்து வருகிறேன். அப்படி இருக்கும் போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றவர்கள் எனக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். அவரது எந்த கருத்துக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களை யார் தாக்கி இருந்தாலும், அடித்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
