தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசரை அதிலிருந்து தூக்கிவிட்டு மீண்டும் தான் அப்பதவியில் உட்கார படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் இளங்கோவன். கடந்த சில மாதங்களாகவே ‘தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறார்!’ என்று இவரது தரப்பு கிளப்பிவிட்ட வாய்மொழி அலைக்கு எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ‘நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை மாநில தலைவர் மாற்றம் எனும் பேச்சுக்கே இடமில்லை! என ராகுல் கூறிவிட்டார்.’ என்று திருநாவுக்கரசர் போட்டு உடைத்துவிட்டார். 

இதனால் நொந்து போன இளங்கோவன் , அரசருக்கு டார்ச்சர் கொடுக்கும் அடுத்த ஆய்தத்தை கையில் எடுத்திருக்கிறார். அது, தானொரு மாஜி என்பதையே மறந்து ஏதோ தானே மாநில காங்கிரஸ் தலைவர் என்பது போல் பேட்டிகளை அள்ளிவிடுவதுதான் அது. அந்த பிளான் படி அவர் பற்ற வைத்திருக்கும் முதல் பட்டாசே திருநாவுக்கரசரை தாறுமாறாக கோபம் கொள்ள வைத்திருக்கிறது. 
அது என்ன பட்டாசு?...

என்னதான் தி.மு.க.வுடன் நெருக்கமாக காட்டிக் கொண்டாலும் கூட, திருநாவுக்கரசருக்கு வரும் தேர்தல்களில் தி.மு.க.வுடன்  கூட்டணி வைக்க விருப்பமேயில்லை! எனும் விமர்சனம் கடந்த சில வாரங்களாகவே வைபரெண்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரசர் இதை அடியோடு மறுத்தும் பிரயோசனமில்லை. அந்த விமர்சனத்தை வைப்பவர்கள் எல்லாமே, அரசருக்கு அ.தி.மு.க. மீது இருக்கும் பாசத்தை சில ஆதாரங்களோடு அடிக்கோடிட்டு காண்பித்து தாக்குகிறார்கள். 

இந்நிலையில்தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ ”நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது.” என்று தட்டிவிட்டிருக்கிறார். இது தமிழக காங்கிரஸ்காரர்கள் மத்தியில் ஒரு மேனியாவாக பரவிவிட, அவர்களின் இலக்கு முழுக்க தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி எனும் நிலைக்கே மாறிக் கொண்டிருக்கிறது. 

இதனால் தன் முடிவுக்கு ஏற்ப கட்சியை மோல்டு செய்யும் வாய்ப்பை தான் இழந்துவிட்டோமோ? இளங்கோவன் இப்படி சிக்கல் செய்கிறாரே? என்று கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம் திருநாவுக்கரசர். ஆனால் இதை டெல்லிக்கு கொண்டு சென்றாலோ ‘இதை கூட சமாளிக்க முடியாம நீங்க எப்படி தலைவர் பதவியில் சிறப்பா செயல்படுவீங்க?’என்று பூமராங்காக தன்னையே தாக்கும் என்பதால் அடக்கி வாசிக்கிறார். 

அவர் பிரஷர் ஆக வேண்டுமென்பதுதான் தனது டார்கெட் என்பதால் இளங்கோவனுக்கு இதில் செம்ம திருப்தி!