evks elangovan says that govt should not build memorial for jaya

ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு மண்மண்டபம் கட்டக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டியளித்தார்.

சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சமாதியின் அருகில் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ததே தவறு. ஆனாலும், அந்த நேரத்தில் நீதிமன்ற உத்தரவு வராததால், அதை தடுக்க முடியவில்லை.

அதேபோல் ஊழல் குற்றவாளி என உச்சநீதிமன்றம் மூலம் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு செலவில் மணி மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளனர். அதையும் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், சட்டப்பேரவையில், ஜெயலலிதாவின் படத்தை வைக்க கூடாது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி தண்ணீரில் தாமரை போல் தத்தளிக்கிறது. இதனால், தன்னை காப்பாற்றி கொள்வதற்காகவே, எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசினார்.

10 நாட்களுக்கு ஒரு முறை எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து பேசுகிறார்கள். எதற்காக பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என புரியவில்லை. இதை பார்க்கும்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை போல் பிரதமர் மோடி கட்ட பஞ்சாயத்து செய்கிறார் என்றே தோன்றுகிறது.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் பிரச்சனை என ஏராளமான இருக்கிறது. அதை யாரும் இதுவரை சரி செய்ததாக தெரியவில்லை. இத்தனை முறை பிரதமர் மோடியை சந்தித்தும், தமிழக பிரச்சனை இதுவரை தீர்ந்ததாகவும் தெரியவில்லை.

அதேபோல் தினமும் அதிமுக எம்எல்ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்கள் பேசுவது, மக்களின் குறைகளை தீர்க்கவோ, பொது பிரச்சனை பற்றி பேசவோ இல்லை.

அவர்களுக்கு ஆட்சியில் என்ன பங்கு தரப்போகிறீர்கள் என்று கேட்கவே செல்கின்றனர். இதை அனைவருமே அறிவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.