திருவல்லிக்கேணி லாட்ஜில் டிஜிபி அலுவலக தொழில்நுட்ப பிரிவு அதிகாரி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(51).இவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவு மேலதிகாரியாக பணிப்புரிந்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து சுரேஷ் குமார் திருவல்லிக்கேணி தசுதீன் கான் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார். 

கடந்த 1ஆம் தேதி முதல்  உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அலுவலகத்திற்கு செல்லாமல் சுரேஷ் குமார் லாட்ஜிலே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ்குமார் தனது அறையில் வழக்கமாக உறங்க சென்றுவிட்டு இன்று காலை நீண்ட நேரமாக வெளியே வராமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த லாட்ஜ் மேனேஜரான மசூத் அறையை திறந்து உள்ளே பார்த்த போது, சுரேஷ் தரையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக மேனேஜர் திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். 

தகவலின் பேரில் போலீசார் விரைந்து சுரேஷ்குமாரை மீட்டு ஓமந்தூரர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சோதித்து பார்த்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளாரா.? அல்லது வேறு காரணமா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.