அதிமுகவில் இருவர் மட்டுமே தலைவர்கள் அல்ல. கட்சியில் இருக்கும் அனைவருமே கட்சியின் தலைவர்கள் தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

அதிமுகவில் இரட்டைத் தலைமையால் பூசல்கள் நிலவி வருவதாக மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிரடியாக விமர்சித்து இருந்தார்.

 

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏக்களும் அம்மா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்பது தவறான தகவல். அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள். அம்மா சமாதியில் பணி நடந்து கொண்டு இருப்பதால் அது பலருக்கு தெரியவில்லை. அதிமுக தொண்டர்களால் ஆளுகின்ற கட்சி.

இங்கே தனிப்பட்ட முறையில் யாரும் தலைவர் இல்லை. கட்சியில் இருக்கிற எல்லோருமே தலைவர்கள் தான். நான் பல நிகழ்சிகளில் தொண்டர்கள் ஆளுகின்ற இயக்கம் இது எனக் கூறி இருக்கிறேன். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்த பிறகு அது பற்றி கருத்துச் சொல்கிறேன். அதிமுக வலிமை மிக்க இயக்கம். உட்கட்சி பூசல் இல்லை. பழுத்த மரம் தான் கல்லடி படும். ஆகையால் வலிமையாக இருக்கிற அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் இருப்பதாக கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை’’ என அவர் தெரிவித்துள்ளார்.