என் கணவர் எனக்கு உயிர் போன்றவர். அவரைப்போலவே இந்த இயக்கமும், அதன் தொண்டர்களும் எனக்கு உயிரானவர்கள்!...என்று அரசியலுக்குள் நுழையும் தேர்ந்த மாணவி போல் பேசி, தமிழக அரசியலரங்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறார் துர்கா ஸ்டாலின்.

அதேவேளையில், கணவர் ஸ்டாலின் உடனான தனது வாழ்க்கை சுவாரஸ்யங்களை தொகுத்து துர்கா எழுதிய ‘அவரும் நானும்’ புத்தகம் தமிழக ஜனரஞ்சக இலக்கிய வட்டாரத்தில் கலகலப்பை கிளப்பியிருக்கிறது.

தமிழின் பிரபல பெண்கள் இதழ் ஒன்றில் சுமார் ஐந்து ஆண்டுகாலமாக ‘தளபதியும் நானும்’ எனும் தலைப்பில் தொடர் எழுதி வந்தார் துர்கா ஸ்டாலின். இதில் தங்களுக்கு திருமணம் நடந்த கதை, அரசியல்வாதியான ஸ்டாலின் குடும்ப பொறுப்பு, ஸ்டாலினின் முன் கோபம்...என அத்தனையையும் புட்டுப் புட்டு வைத்திருந்தார்.

’நம்ம வீட்ட மாதிரிதான் ஸ்டாலின் வீட்டுலேயும் நடக்குது.’ என்று வாசகிகள் நினைக்கும் வகையில் வெகு வெள்ளந்தித்தனமாக அந்த விஷயங்கள், விவரிப்புகள் விரிந்திருந்தன.  

இந்நிலையில் இந்த தொடர் ‘அவரும் நானும்’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல வி.ஐ.பி. பெண்கள் கலந்து கொண்டனர். தன் பேத்திகளின் கையால் அந்த புத்தகங்களை பெற்றுக்கொண்டார் துர்கா.
இந்த புத்தகம் குறித்து பெண் ஆளுமைகள் சிலர் பேசினர்.

அப்போது பேசிய முனைவர் சாரதா நம்பி ஆரூரன், “தன் கணவன் மீதான பாசத்தையும், ஏக்கத்தையும் மிக அழகாக இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார் துர்கா. ஒரு இடத்தில் மிக சுவாரஸ்யமான விஷயமொன்றை எந்த சங்கோஜமும் இன்றி வெளிப்படுத்தியுள்ளார். அது தன் கணவர் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

அதாவது ஒரு முறை ஸ்டாலினும், துர்காவும் காரில் பயணித்துள்ளனர். அப்போது கணவருடனான தனிமையில் ‘ஏங்க, இப்படியே எங்கேயாவது ஓடி போயிடலாமா?’ என்று துர்கா கேட்டுள்ளார். இது அப்படியே அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் பணிகள். வெளியே சென்று கட்சியினரை சந்தித்தாலே உற்சாகமாகிவிடுவார்கள். ஆனாள் தலைவர்களின் இல்லத்தரசிகளுக்கு கணவன் தான் உலகம். அவரோடு நேரத்தை செலவிட முடியவில்லையே! என்கிற ஏக்கம் எப்பவும் இருக்கும்.

இதை மிக அழகாகவும், ஏக்கமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் துர்கா.” என்று கூற, அரங்கத்தில் கைத்தடல் அடங்க வெகு நேரமாகியுள்ளது.