Even if Rajini comes to politics Then we will stand
ரஜினி மக்கள் மன்றத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூறினர். மேலும் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என ரஜினி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார். பிறகு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை கடந்த 4 மாதங்களாக அவர் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் வருடம்தோறும் மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனை, சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்காக ரஜினிகாந்த் கடந்த 23 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 11 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து அவர் சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய அவர், காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாடல் வெளியீட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த், இயக்குனர் பாரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், விழா நாயகன் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாடல் வெளியீட்டு விழாவின்போது பேசிய ரஜினி, என்ன பண்றது... எல்லாத்துக்கும் நேரம் இருக்கு... அந்த நேரம் விரைவில் வரும். அப்போது வருவேன். இன்னும் அந்த காலம வரவில்லை. என்னை வாழவைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறியிருந்தார். அரசியல் கட்சி தொடங்கப்போகும் தேதி போன்றவை குறித்து அறிவிப்பார் என்று எதிபார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தமது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்குப் பின், மக்கள் மன்ற நிர்வாகிகள், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ரஜினி மக்கள் மன்றத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறினர். மேலும், ஜூன் 2 ஆம் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த எங்களுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம் என்று அவர்கள் கூறினர்.
