திமுகவின் கிராம சபைக் கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி தூக்கமிழந்து தவித்து வருகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார். 

திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் டிசம்பர் 23ம் தேதி  10 நாட்கள் தமிழகம் முழுவதும் 16,500 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 23ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மக்கள் தாமாக முன்வந்து ஆளும் அரசின் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைப்பு தருகின்றனர். இந்த சூழலில் அரசியல் கட்சிகள் நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், திமுக கிராம சபை பிரச்சார கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இனி மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மரக்காணத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்;- திமுகவின் கிராம சபைக் கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி தூக்கமிழந்து தவித்து வருகிறார். பிரதமர் மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது. குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன். நேரடியாக அரசியலுக்கு வரவில்லை; சிறுவயதிலிருந்து கட்சி உணர்வோடு கட்சி வழியாக பதவிக்கு வந்தேன் என குடும்பக்கட்சி என்ற புகாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.