இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் சகோதரிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் கட்சித் தலைவர் எஸ்.டி. ஹசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றக் கர்நாடகா, குஜராத், உத்திரப் பிரதேசம் உள்பட பாஜக ஆளும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. உத்திர பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் அங்கீகாரம் அளித்துள்ளார். இதன்படி திருமணத்திற்காக மதமாற்றம் செய்பவர்களுக்கு 1 முதல் 5 வருடம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

 

எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வயதுக்கு வராதவர்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்தால் மூன்று முதல் 10 வருடம் சிறைத் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஒருவர் வேறு ஏதாவது மதத்திற்கு மாறிய பின்னர் திருமணம் செய்ய விரும்பினால் திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். உத்திரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத் உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வருவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உத்திரப் பிரதேச அரசின் இந்த சட்டம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்.பி.,யுமான எஸ்.டி. ஹசனிடம் கேட்டபோது, ‘’முஸ்லிம் இளைஞர்கள் எல்லா இந்துப் பெண்களையும் சகோதரிகளாகத் தான் பார்க்க வேண்டும். நீங்கள் தான் உங்களை சுயமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவறு செய்வதற்காக உங்களைச் சிலர் ஊக்குவிக்க வாய்ப்பு உண்டு. அந்த வலையில் நீங்கள் சிக்கிவிடக் கூடாது. 

லவ் ஜிகாத் என்பது ஒரு அரசியல் ஆயுதம் மட்டும் தான். நம்முடைய நாட்டில் மதம் பார்க்காமல் பலரும் அவர்களுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றனர். முஸ்லிம்கள்- இந்துக்களையும், இந்துக்கள்- முஸ்லிம்களையும் திருமணம் செய்கின்றனர். ஆனால், அது எண்ணிக்கையில் மிகவும் குறைவு தான். முஸ்லிம் இளைஞர்கள் லவ் ஜிகாத் வழக்குகளில் சிக்காமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை காதலிக்கும் ஆண் முஸ்லிம் தான் என்று தெரிந்தது தான் பெண்கள் காதலிக்கின்றனர். ஆனால், சமூக அழுத்தம் காரணமாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாகவும் அவர்கள் உங்களைச் சிக்க வைத்து விடுவார்கள். அது பின்னர் லவ் ஜிஹாத் வழக்காக மாறிவிடும்’’ என அவர் எச்சரித்துள்ளார்.