ஆயிரம் அமித்ஷா வந்தாலும் திமுகவை ஆட்டவோ.. அசைக்கவோ முடியாது..! பொங்கி எழுந்த திமுக தலைவர் ஸ்டாலின்.!
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித்ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது. திமுகவைப் பற்றி அமித்ஷாவுக்கு என்ன தெரியும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித்ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது. திமுகவைப் பற்றி அமித்ஷாவுக்கு என்ன தெரியும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திருநெல்வேலி - தென்காசி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசிய போது..
“கடந்த 22ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பதுபோல அவரது பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனைப் பட்டியல் போடத் தயாரா? என்று அமித்ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பாஜக ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா? என்று தெரியவில்லை.
இதை எந்த விழாவில் கேட்கிறார் என்றால் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடக்கவிழாவில்தான் கேட்கிறார் அமித்ஷா. ஐயோ பாவம். அவருக்காகப் பரிதாபப்படுகிறேன். மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்து 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான்.
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன நன்மைகள் எல்லாம் செய்துள்ளோம் என்பதை நான் பட்டியல் போட ஆரம்பித்தால், இன்று முழுவதும் பட்டியல் போடலாம். அந்த அளவுக்கு அபரிமிதமான திட்டங்களைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டினோம்.அமித்ஷா என்றால் எல்லாம் தெரிந்தவர், சாணக்கியர், அவருக்கு எல்லா மாநிலங்களும் அத்துப்படி என்று ஊடகங்கள் அவரைப் பூதாகரமாக்கிக் காட்டுகின்றன. அவருக்கு முதலில் திமுக என்றால் என்ன மாதிரியான அரசியல் கட்சி என்பதே தெரியவில்லை.
எழுபது ஆண்டு இயக்கம் இது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த இயக்கம் இது. ஒரு முறையல்ல, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் இது. தமிழகச் சட்டப்பேரவையில் 100 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் இது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இது.அது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, திமுக தொண்டனாக அமித்ஷாவுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் பாஜக அரசால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது? எதுவும் இல்லை. விவசாயிகளைச் சிதைக்கும் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தீர்கள். சிறுபான்மையினர் குடியுரிமையைக் காவு வாங்கும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.ஈழத்தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க மறுத்தீர்கள்! இன்று வரையிலும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கிறது.
அமித்ஷா இன்னொரு குற்றச்சாட்டையையும் வைத்துள்ளார். 'வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் வாரிசு அரசியலுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்' என்று பேசி இருக்கிறார். அவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை?மகனை எப்படியாவது மத்திய மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டு இருப்பவர் பன்னீர்செல்வம்தான். அவருக்குத்தான் அமித் ஷா பதில் சொல்கிறாரா? வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அமைச்சர் அமித்ஷாவுக்கோ பாஜகவுக்கோ அருகதை இல்லை. வாரிசுகளால் நிரம்பி வழியும் கட்சிதான் பாஜக.
அமித் ஷாவின் மகன் - ஜெய்ஷா இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருக்கிறார். அது அவருக்குத் தகுதியின் அடிப்படையில் கிடைத்த பதவியா? அல்லது அப்பா உள்துறை அமைச்சர் என்பதால் கிடைத்த பதவியா?மத்தியப் பாதுகாப்பு அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் எம்எல்ஏ ஆக இருக்கிறார்.இப்படி என்னால் சொல்லிக்கொண்டே போக முடியும். இவை எல்லாம் அமைச்சர் அமித்ஷாவுக்குத் தெரியாதா? இவர்கள் எல்லாம் அவருக்குத் தெரியாமல் அரசியலுக்குள் வந்துவிட்டார்களா? அல்லது இவர்களை எல்லாம் அமித் ஷாவுக்குப் பிடிக்காதா?
திராவிட இயக்கம் என்பதே குடும்ப இயக்கம்தான். திமுகவின் மாநாடுகளுக்குக் குடும்பம் குடும்பமாக வந்து சோறு பொங்கி சாப்பிட்டு, தலைவர்களின் கருத்துரைகளைக் கேட்டுச் சென்ற காட்சியை தமிழகம் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் அமித்ஷாவுக்குத் தெரியாது. அவர் ஊழலைப் பற்றிப் பேசுகிறார்.
வலது பக்கம் உட்கார்ந்து இருக்கும் பழனிசாமி, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இடது பக்கம் உட்கார்ந்திருக்கும் பன்னீர்செல்வம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது?ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி பேசுவதற்கு அமித்ஷாவுக்கு உரிமை உண்டா?
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்ற பழனிசாமியை அருகில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித்ஷாவுக்கு உரிமை உண்டா?ஸ்டாலினாகிய என்னை அரசியல் வாரிசு என்று அமித் ஷா சொல்வாரானால், ஆம்! நான் அரசியல் வாரிசுதான். நான் கருணாநிதியின் மகன். இதை விட எனக்கு வேறு பெருமை தேவையில்லை. நான் அவரது ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு. திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.
ஸ்டாலின் என்பது என்னுடைய தனிப்பட்ட பெயரல்ல. ஒரு இயக்கத்தின் பெயர். நான் தனிமனிதனல்ல. நான் மட்டுமல்ல, திமுகவில் யாரும் தனிமனிதர்கள் அல்ல. நாங்கள் அனைவரும், ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது.இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது”.