evanga in hydrabad

இன்று தொடங்கவுள்ள பன்னாட்டு தொழில் முனைவார் மாநாட்டில் பங்கேற்பதற்காக டிரம்ப் மகள் இவாங்கா ஹைதராபாத் வந்துள்ளார். இதையொட்டி வரலாறு காணாத அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பன்னாட்டு தொழில் முனைவோர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.


இந்நிலையில், இவாங்கா இன்று அதிகாலை ஹைதராபாத் விமானநிலையம் வந்தடைந்தார். அவரை அமெரிக்க மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.



வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் இவாங்கா பங்கேற்கிறார். இந்த விருந்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்.

இங்கு சுமார் 2,000 பேர் கூடும் வசதி கொண்ட பிரமாண்ட விருந்து மண்டபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்காவுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஓட்டல் நிர்வாகம் செய்துள்ளது.



ஹைதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உள்பட முக்கிய இடங்களுக்கு செல்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் பன்னாட்டு தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.