கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து அதிமுக உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவர் இசக்கி சுப்பையா. சட்டத்துறை அமைச்சராக சிறிது காலம் பொறுப்பு வகித்தார். கடந்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. 
 
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தபோது  இசக்கி சுப்பையா, டிடிவி தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது இவரது குடும்பத்திற்கு சொந்தமான குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில்  உள்ள ரிசார்ட்டுகளில் முக்கிய ஆலோசனைகள் நடந்தது.

அண்மையில்  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா அமமுகவை விட்டு வெளியேறிய போது ஐந்தருவியில் உள்ள தனக்கு சொந்தமான ரிசார்ட்சில் தன்னுடைய ஆதவாளர்களை இசக்கி சுப்பையா அழைத்து பேசினார். 

இதனைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர முடிவெடுத்தார். இது குறித்து முறைப்படி ஓபிஎஸ்- இபிஎஸ்சுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், வருகிற 6ம் தேதி இசக்கி சுப்பையா தலைமையில் தென்காசியில் நடக்கும் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமமுகவினர் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில்  அதிமுகவில் இணைகிறார்.

இந்த இணைப்பு விழாவிற்காக தென்காசியில் உள்ள இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் பங்கேற்க  வருவோருக்கு கறி விருந்து, சாப்பாடு என சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் அமமுக அலுவலகம் செயல்பட்டு வரும் அசோக் நகர், நடேசன் சாலையில் உள்ள தன்க்கு சொந்தமான கட்டிடத்தை  இசக்கி சுப்பையா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வாரம்தான் டிடிவி தினகரன் இசக்கி சுப்பையாவின் அந்த கட்டடத்தை அமமுக அலுவலகமாக பயன்படுத்திக்கொள்ள மேலும் ஓராண்டு நீட்டித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.